ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது: 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கின
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் அதனை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மேலும் திருப்பூர்-கோவை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வருகிற 25ம் தேதி வரை 20 நாட்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 20 நாட்களுக்கு இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.100 கோடி அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விசைத்தறிகளில் பணியாற்றும் 3லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூல் விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்த காடா துணிகளுக்கு நிலையான விலை கிடைக்காததால் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே விசைத்தறி காடா ஜவுளி உற்பத்தி தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu