குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க தனிக் குழு: கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சியின் பழைய, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தை சூயஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்கென, வீடுகளுக்கு இணைப்பு வழங்குவது, மேல்நிலை தேக்க தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
ஒப்பந்தத்தின்படி, திட்ட பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக, 2025 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக கோவை மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, தனிக்குழு அமைத்து, பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் இத்திட்டத்துக்கு, 700 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்க வேண்டும்; தற்போது 351 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிந்துவிட்டன. மொத்தம், 1.80 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டியுள்ள நிலையில், 30 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இந்த திட்டத்தின்படி மொத்தம், 33 குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட வேண்டியுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள், 13 தொட்டிகள் கட்டி முடிக்கப்படும். இதற்கு தேவையான நிதியை வழங்குகிறோம். மக்கள் எதிர்ப்பு, போக்குவரத்து இடையூறு உள்ளிட்ட காரணங்களால் இப்பணிகள் தாமதமாகின்றன.
பணிகளை வேகப்படுத்தவும் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொட்டியின் கட்டுமானத்தையும் அதிகாரிகள் அடங்கிய தனி குழு கண்காணித்து வாரந்தோறும் அறிக்கை அளிக்கும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu