தோல்வி பயத்தில் பாஜக தேர்தலுக்கு இடையூறு செய்ய திட்டம் : கணபதி ராஜ்குமார் குற்றச்சாட்டு
கணபதி ராஜ்குமார்
கோவை பீளமேடு பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், “நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10.40 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி அண்ணாமலை பிரச்சாரம் செய்துள்ளார். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகள் இந்தியா கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இரவு 10.40 மணிக்கு வாகனத்தில் ஒலி பெருக்கியில் பேசிக் கொண்டு செல்கிறார். இது அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு சாட்சியாக உள்ளது. இதே போல பல இடங்களில் அத்துமீறி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
அண்ணாமலை வேட்பாளராக இருக்கும் போதே சட்டத்தை மீறி செயல்படுகிறார். திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகிறார். இது குறித்து அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளோம். சட்டத்திற்கு புறம்பாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. பாஜகவினர் மதவெறியை தூண்டி வெற்றி பெறலாம் என மனப்பால் குடிக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது திமுகவினர் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அண்ணாமலை பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஒருதலைப்பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “கோவை அமைதியை விரும்பும் நகரம். இங்கு ரவுடிசம் எடுபடாது. பாஜகவின் சுயரூபம் வெளியே வந்துள்ளது. பாஜகவினர் தோல்வி பயத்தில் வெளிமாநில ஆட்களை ஊடுருவ செய்து கலவரத்தை உருவாக்கலாம் என ஐயம் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவற்றை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரபூர்வமாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தோல்வி பயத்தில் தேர்தலுக்கு இடையூறு செய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் வருகிறது. நடுநிலையோடு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆளுங்கட்சியாக நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறோம். பாஜகவினர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சாதகமான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த மிரட்டல் எல்லாம் கோவையில் எடுபடாது” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu