கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 6 மாதத்தில் 310 உடல்கள் பிரேதப்பரிசோதனை
பைல் படம்.
கோவை சிங்காநல்லூரில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள கடந்த 2018-ம் ஆண்டே மாநில சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்தது. ஆனால் காவல் நிலைய எல்லைகள் பிரிக்கப்படாததால் பரிசோதனை தொடங்கவில்லை.
இந்நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியின் கீழ் 24 போலீஸ் நிலையங்கள், இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியின் கீழ் 25 போலீஸ் நிலையங்கள் என வரையறுக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி பிரேத பரிசோதனை தொடங்கியது. இதையடுத்து கடந்த 6 மாதங்களில் இங்கு 310 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை தவிர, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குக்கு(போக்சோ) தேவையான பரிசோதனை, வயது பரிசோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 22 வழக்குகளில் மருத்துவ சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் டீன் ரவிந்திரன் கூறியதாவது:
நாட்டில் உள்ள வேறு எந்த இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனை வசதி இல்லை. இங்குதான் முதல் முறையாக தொடங்கப்பட்டது. சட்ட மருத்துவத்துறை பேராசிரியர் மனோகரன் தலைமையில் 4 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 5 சட்டம் சார்ந்த மருத்துவர்கள் இங்கு உள்ளனர்.
தினமும் சராசரியாக 10 முதல் 15 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முடியும். தற்போது 21 உடல்களை வைக்கும் குளிர்சாதன வைப்பறை வசதி உள்ளது. மேலும் 9 உடல்களை வைக்கும் வசதி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரேத பரிசோதனை அரங்கில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி என 2 இடங்களிலும் பிரேத பரிசோதனை நடைபெறுவதால் விரைவாக பரிசோதனை முடிந்து உடல்களை உறவினர்கள் பெற்று செல்ல முடிகிறது. மேலும் பிரேத பரிசோதனை சான்று 24 மணி நேரத்துக்குள் வழங்கி வருகிறோம்.
மருத்துவ கண்காணிப்பாளர் டி.ரவிக்குமார், இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர் இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். முன்பு இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் பிரேத பரிசோதனை பயிற்சிக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இங்கேயே அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அந்த மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu