கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை
கேசிபி நிறுவனம் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம்
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாத முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு, சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார் வீடுகள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கோவையில் மட்டும் சுமார் 42 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் 13 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வேலுமணியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் சந்திரபிரகாஷுக்கு சொந்தமான கேசிபி என்ஜினியர்ஸ் நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவை அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே நெஞ்சுவலி காரணமாக சந்திரபிரகாஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் மூன்று தளங்களில் அமைந்துள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு 12 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். நேற்றைய தினம் இரண்டு தளங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில் மூன்றாவது தளத்தில் இன்றும் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu