திமுக அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது: இபிஎஸ்

திமுக அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது: இபிஎஸ்
X

கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் இபிஎஸ். 

5 கட்சிக்கு சென்று வந்த அமைச்சரை செந்தில்பாலாஜி கோவைக்கு நியமித்திருக்கிறார் என இபிஎஸ் குற்றம் சாட்டினார்.

கோவை கொடிசியா மைதானத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ஊடகங்களை வைத்து திட்டங்களை செயல்படுத்தியது போல் பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள் என குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் 190-200 ரூபாய்க்கு வழங்கப்பட்ட அம்மா சிமெண்ட்டை, இப்போது 450 ரூபாய்க்கு வலிமை சிமெண்ட் என வழங்குகின்றனர் எனவும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

தன்னை சூப்பர் முதல்வர் என தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்தியாவிலேயே ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் எனக்கூறிய அவர், நாட்டு மக்களுக்கும், கோவை மக்களுக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின் என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என கேள்வி எழுப்பினார். கோவையில் வாக்காளர்களுக்கு வழங்க 70 லாரிகளில் 70 லோடு ஹாட்பாக்ஸ்கள் இறக்கப்பட்டுள்ளது எனவும், கொள்ளையடித்த பணத்தை எந்த ரூபத்தில் தந்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறிய அவர், ஆனால் ஓட்டு இரட்டை இலைக்கு போடுங்கள் எனத் தெரிவித்தார்.

திமுக போடும் திட்டங்கள் அவர்களது கட்சி மற்றும் குடும்பத்தினருக்கும் மட்டுமே செல்கிறது எனவும், 5 கட்சிக்கு சென்று வந்த அமைச்சரை செந்தில்பாலாஜி கோவைக்கு நியமித்திருக்கிறார் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று கேட்டால் அணில் அமைச்சர் அணில் சென்றது என்கிறார் எனவும், மின்வெட்டு என்பதும் மின் தடை என்பதும் வேறு வேறு. மின்வெட்டு குறித்து கேட்டால் மின் தடை குறித்து பேசுகிறார் எனவும் அவர் கூறினார். காவல் துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது எனவும், கூலிப்படையை வைத்து அதிமுக நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் எனவும் அவர் கூறினார். மேலும் அதிமுக நிர்வாகிகளை கைது செய்து அழைக்கழிக்கின்றனர் எனவும் காவல்துறையினர் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு திமுகவிற்கு ஆதரவாக புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர் எனவும் கூறிய அவர், காவல்துறை தரம் தாழ்ந்து போனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

திமுக அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது என அவர் தெரிவித்தார். தில்லு, திராணி இருந்தால் நேரடியாக அதிமுகவை எதிர்த்து திமுக வெற்றி பெற வேண்டும் எனவும், குறுக்கு வழியை கையாளக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். அமைதியான கோவையை கலவர பூமியாக திமுகவினர் மாற்ற முயற்சிக்கின்றனர் எனவும், இது தொடர்ந்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஓட ஓட மாவட்டத்தில் இருந்தே விரட்டி அடிப்போம் எனவும் அவர் கூறினார். மேலும் எங்களுக்கும் செய்ய தெரியும். ஆனால் அதற்காக எங்களை மக்கள் தேர்வு செய்யவில்லை. சட்டத்திற்கு எதாவது பங்கம் ஏற்பட்டால் அதை சரி செய்ய அனைத்தையும் செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் நான் பச்சை பொய் சொல்கிறேன் என்கிறார் எனவும், நான் கலைஞரின் மகன் என்கிறார் ஸ்டாலின். யார் இல்லை என்று சொன்னார்கள்? எனவும் அவர் கூறினார். மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுப்பேன் என்றவர், கொடுத்தாரா? ஆட்சிக்கு வந்தவுடன் கொடுப்பதாக சொன்னவர்கள் மக்கள் கேட்டால் உதயநிதி இன்னும் 4 ஆண்டுகள் இருப்பதாக சொல்கிறார். 13 லட்சம் பேருக்கு தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 35 லட்சம் பேர் வட்டி கட்டி தான் நகையை மீட்க முடியும். ஸ்டாலின் பேச்சை நம்பியதால் திமுகவிற்கு ஓட்டு போட்டு நகைகளை இழந்துவிட்டார்கள். அவர்கள் ஒரு போதும் ஸ்டாலினை மறக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்விக்கடன் ரத்து என சொன்னார்கள் செய்யவில்லை எனவும், முதியோர் உதவித்தொகை உயர்த்தவில்லை எனவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. மத்திய அரசு குறைத்த போதும் தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். திமுகவின் காந்தி செல்வன் மத்திய இணையமைச்சராக இருந்த போது தான் நீட் கொண்டு வரப்பட்டது எனவும், உச்சநீதிமன்றத்தில் திமுகவும், காங்கிரசும் தான் மறுசீராய்வு மனு போட்டதால் தான் நீட் தேர்வு வந்தது எனவும் கூறிய அவர், எங்கு வேண்டுமானால் வந்து நீட் குறித்து விவாதிக்க தயார் எனத் தெரிவித்தார். திமுக நேர்வழியில் வந்த சரித்திரமே இல்லை எனவும், திமுகவிற்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு கார்ப்பரேட் கட்சி போல் நடத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். கட்சியினர் நிர்வாகிகளை நம்பாமல், ஏஜென்சியை கொண்டு வந்து கொள்ளையடித்த பணத்தை செலவு செய்து வென்றுள்ளார்கள் எனவும், 8 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்று அமைச்சராக உள்ளனர். பணம் செலுத்தி முதலீடு செய்தவர் அமைச்சராகிவிட்டார் எனவும் அவர் கூறினார்.

கோவை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும், 1581 கோடியில் நாங்கள் அடிக்கல் நாட்டிய அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை துவக்கி வைக்கிறார். யாரோ பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்துகொள்கிறார் எனவும் அவர் தெரிவித்தார். காணொலி காட்சியில் பார்த்தால் எப்படி தெரியும். கோவை வந்து பார்த்தால் தான் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை பார்க்க முடியும் என அவர் கூறினார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கி வருகின்றனர் எனவும், மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை முடக்குவது தான் திமுகவின் வேலை எனவும் அவர் தெரிவித்தார். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது 500 திட்டங்களுக்கு டெண்டர் வைத்து பணி துவங்கப்பட்டது எனவும், ஆனால் ஆட்சி மாறியதும் எங்களுக்கு பேர் கிடைக்குமே என்று ரத்து செய்துவிட்டார்கள் எனவும் கூறிய அவர், சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் அரணாக இருக்கும் கட்சி அதிமுக என்பதை பிரச்சாரத்தின் போது எடுத்து சொல்லுங்கள் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!