வாலாங்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

வாலாங்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
X

செத்து மிதக்கும் மீன்கள்.

குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது மக்களின் புகார்.

கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்குள் உள்ள குளக்கரைகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குளக்கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்படுவதோடு, படகு குழாம், மிதவை சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

மேலும் குளங்களுக்கு மழைநீர் செல்லும் பாதைகளை அமைக்காமல் விடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை வாலாங்குளத்தில் இன்று காலை முதல் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 2 மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கோவையில் உள்ள 27 குளங்களும் முழுமையாக நிரம்பியது. இதனால் குளங்களுக்கு இடையே தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது.

ஓடுநீர் இருந்தாலும், கழிவு நீரும், ரசாயன கழிவுகளும் கலப்பது அதிகரித்துள்ளதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் தண்ணீரும் இயல்பான நிறத்தை விட, பழுப்பு நிறத்திலும், சில இடங்களில் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளின் இயற்கை சூழல் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு குளத்து நீர் மோசமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் மீன்கள் செத்து மிதப்பது கோவை மாநகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்