நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது: பிரதமர் நரேந்திர மோடி
கோவை கொடிசியா அரங்கில் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை கொடிசியா அரங்கில் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் காணொலி காட்சி மூலம் நெய்வேலி ஆயிரம் மெகா வாட் அனல் மின் திட்டம், திருப்பூர், மதுரை, திருச்சியில் 4 ஆயிரத்து 144 அடுக்குமாடி குடியிருப்புகள், தூத்துக்குடி துறைமுகம் அருகேயுள்ள கோரம்பள்ளம் பாலப்பணிகள் ஆகியவற்றை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மேலும் கீழ்பவானா கால்வாய் நவீனப்படுத்துதல், 8 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்தல், தூத்துக்குடி துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'கொரோனா காலத்திலும் நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு. நீர் மேலாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தென்மாவட்டங்களில் தொழில் வளத்தை மேம்படுத்த தொடர்ந்து அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி - கோதாவரி நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தவும், கோவை மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டில் 48.45 விழுக்காடு மக்கள் நகரப்புறங்களில் வசித்து வருகின்றனர். நகர்ப்புற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு மேலும் உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி. கோவையில் இருந்து துபாய்க்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கவும், தூத்துக்குடி, சேலம் இரவு நேர விமானம் சேவையை துவங்கவும் அவர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கீழ் பவானி கல்வாய் திட்டத்தினால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் எல்லாம் தொழுதுண்டு பின்செல்வார் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் பேசினார். நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. இரண்டு மின் திட்டங்களை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டம் சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கும். பசுமை துறைமுகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகளவில் சரக்கு கையாளும் மையமாக இந்தியா உருவாகும். சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சரக்குகளை கையாள புதிய பூங்கா துவங்கப்பட உள்ளது.
வளர்ச்சியும், சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சகர்மலா திட்டத்தில் தூத்துக்குடி கோரம்பள்ளம் பாலம் 8 வழிச்சாலையாக அமைக்கப்படுவதால் சரக்குகள் வரும் நேரம் குறையும். தூத்துக்குடி சூரிய மின் சக்தி திட்டம் துறைமுகத்தின் 60 சதவீதத்தை நிறைவு செய்ய உதவும். பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் 4 ஆயிரத்து 143 வீடுகளை திறந்து வைத்ததில் பெருமிதம் அடைகிறேன். சுதந்திரமடைந்து 73 வருடங்களுக்கு பிறகு சொந்த வீடுகள் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அதிக நகரமயமான மாநிலம். சீர்மிகு நகரங்களில் துவங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்களில் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மக்களின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம். சுயசார்பு பாரததத்தை உருவாக்குவோம்" என அவர் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu