தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம்: கோவையில் முதல்வர்
கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். பின்னர் பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தொழில் துறையினர் முன் வைத்துள்ள கோரிக்கைகளில் எங்களால் என்னென்ன முடியுமோ அத்தனையும் செய்து கொடுக்கப்படும். தொழிலும் வேளாண்மையும் ஒரு நாட்டிற்கு இரு கண்கள். இதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
டெல்டா பகுதியில் வழக்கமாக 23 லட்சம் மெட்ரிக் உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு 32 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தியாகி இருக்கின்றது. கொரொனா காலத்திலும் 60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வந்துள்ளது. தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. அகில இந்திய அளவில் சேலம் மாநகர காவல் நிலையம் முதலில் வந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லாவிட்டால் தொழில் சிறப்பாக இருக்காது. சட்டம் ஒழுங்கை இந்த அரசு கவனமாக பார்த்து கொள்கின்றது.
தடையில்லா மின்சாரத்தை இந்த அரசு வழங்குவதுடன், மின் மிகை மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. கோவை மாநகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேலுமணி நடவடிக்கை எடுத்து வருகின்றார். முன்மாதிரி அமைச்சராக வேலுமணி இருக்கின்றார். நிதி இருக்கின்றதோ இல்லையோ கோரிக்கைகளை வைத்துக்கொண்டே இருப்பார். மேற்கு புறவழிச்சாலை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றோம். தொழில் துறையினர் அச்சப்பட தேவையில்லை. அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றபடும். இந்த ஆட்சியில் தொடரும் நன்மைகள் தொடர எங்களுக்கு நேசகரம் நீட்ட வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu