அபாய நிலையில் குடியிருப்பு - தொடரும் அலட்சியம்
கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் கிழக்கு மாவட்டம் பொறுப்பாளருமான நா. கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் தொகுதி, 64 வது வட்டம், உழவர் சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55 ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது.
இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, பாழடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த குடியிருப்பில் உள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, இனி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து, கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிதி நிலைக் கூட்டத் தொடரிலும், கேள்வி நேரத்திலும் , கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தும் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார். துணை முதல்வர் இவ்வாறு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரையிலும் ஒரு சிறு கல் கூட நகர்த்தப்படவில்லை. பாராமுகமாக, சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களை பற்றி கவலைப்படாமல் மக்களைக் காக்கும் தனது கடமையிலிருந்து நழுவி, பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்த்துக் கொண்டு, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அ.தி.மு.க. அரசு.
ஆகவே , பாதிக்கப்பட்ட இந்த மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வீடுகள் இடிந்து பெரும் விபத்து ஏற்படும் முன், மழையினால் பெரிதும் சேதமடைந்துள்ள இந்த வீடுகளை உடனடியாக இடித்து விட்டு, காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும். அதுவரை, அதே இடத்தில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைத்துத் தர வேண்டுமென்றும் என்று வலியுறுத்தி நாளை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திமுக சார்பில் மக்களைத் திரட்டி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது" என்றார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu