பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு

பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு
X

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு மாணவர்களுக்கு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது

இன்று பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் 83 அரசு மேல்நிலைப்பள்ளி, 116 அரசு உயர்நிலைப்பள்ளி, 232 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 781 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி என்று மொத்தம் 1,212 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்தது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல் கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

அவர்கள் காலையிலேயே எழுந்து, புறப்பட்டு, புத்தக பையை எடுத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். முதல் நாள் என்பதால் பெரும்பாலான மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் பள்ளியில் கொண்டு வந்து விட்டு சென்றனர்.

கோடைவிடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். அதன்படி பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் நின்று ரோஜா பூ உள்ளிட்டவற்றை கொடுத்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியங்கள் உள்ளிட்ட இசை வாத்தியங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை முடிந்ததும், மாணவர்கள் பள்ளிக்குள் சென்று தங்கள் வகுப்பறைக்கு சென்றனர். அங்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை நேரில் சந்தித்தால், அவர்களுடன் கை குலுக்கியும், கட்டிபிடித்தும் அன்பை பரிமாறி கொண்டனர். பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்றே மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

கோவை-திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை சக மாணவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேபோல் மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!