நொய்யல் ஆற்றில் விடிய விடிய, மணல் கொள்ளை: கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ளது, தொண்டாமுத்தூர் வட்டார பகுதி. இப்பகுதியில், மூன்று திசைகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அரணாக உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியில்தான், கோவையின் ஜீவ நதியாக விளங்கி வரும் நொய்யல் ஆறு உருவெடுத்து, கரூர் வரை நீண்டு செல்கிறது.
ஆறு, வாய்க்கால், குளம், குட்டைகள் என, நீராதாரங்கள் நிறைந்துள்ளதாலும், மண் வளமாக இருப்பதாலும், இப்பகுதியில் விவசாயம் செழுமையாக உள்ளது. இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை வளங்களை சுரண்டுவது தொடர்கதையாகி வருகிறது.
நொய்யல் ஆறு உருவாகுமிடமான தொம்பிலிபாளையம் கூடுதுறை, விராலியூர், ஆட்டுக்காரன்கோவில் பள்ளம், வடிவேலாம்பாளையம் பள்ளம், ஆலாந்துறை நொய்யல் ஆறு என, பல்வேறு இடங்களிலும் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. தற்போது சிறிதளவு நீர் தான் நொய்யல் ஆற்றில் செல்கிறது.
இதனை பயன்படுத்தி, இரவு நேரங்களில், கூடுதுறை நொய்யல் ஆற்றில், ஆளும்கட்சியினரின் ஆதரவுடன், பழக்கப்படுத்தப்பட்ட கழுதைகளை பயன்படுத்தியும், கூடுதுறை பாலத்திற்கு, 100 மீட்டர் தொலைவில் உள்ள, தனியார் தோட்டத்தின் வழியாக, நொய்யல் ஆற்றில், இரவு நேரங்களில் விடிய, விடிய ஜே.சி.பி., இயந்திரத்தை பயன்படுத்தி, யூனிட் கணக்கில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
மணல் கொள்ளை குறித்து, பொதுமக்களுக்கே தெரியும் நிலையில் இது குறித்து நன்கு அறிந்தும், கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளால், கோவையின் இயற்கை கனிம வளம் சிறிது,சிறிதாக குறைந்து வருகிறது.
கனிம வள கொள்ளையை தடுக்காவிட்டால், இயற்கை எழில் நிறைந்த இப்பகுதி, விரைவில், வறண்ட பகுதியாக மாறிவிடும் என்பதை உணர்ந்து, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu