கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை பணி: போக்குவரத்து பாதிப்பு

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை பணி: போக்குவரத்து பாதிப்பு
X

முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தில் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி

கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் புதிய பேருந்துநிலையம் அருகே தார் சாலை போடும் பணிகள் திடீரென தொடங்கியது.

இதன்காரணமாக கிணத்துக்கடவு-அரசம்பாளையம் பிரிவு அருகே தடுப்பு அமைக்கப்பட்டு, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் அரசம்பாளையம் பிரிவில் இருந்து, சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று கிணத்துக்கடவு பேருந்து நிலையம் செல்ல வேண்டி உள்ளது. அதேபோல பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் பயணிகள் முத்தூர் பிரிவில் இறங்கி அங்கிருந்து நடந்துபேருந்து நிலையம் வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கிணத்துக்கடவு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி திடீரென நடைபெற்றதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் மேம்பாலத்தின்கீழ் டிவைடர் வைத்து உள்ளதால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு வழிப்பாதையில் திரும்ப வேண்டியுள்ளது. எனவே இந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், காலைநேரத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தின் மேல் சென்றது.

எனவே பேருந்துசுக்காக காத்திருந்த நாங்கள் அனைவரும் திரும்பவும் அரசம்பாளையம் பிரிவு சென்று, அங்கிருந்து மேம்பாலத்தின் வழியாக செல்லும் பேருந்துகளை மறித்து ஏற வேண்டி இருந்தது. எனவே பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் தார்சாலை அமைக்கும் பணியை செய்து முடிக்க வேண்டும்என்று கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!