மலை கிராமத்துக்கு முதல்முறையாக சாலை: பொதுமக்கள் மகிழ்ச்சி

நெடுங்குன்று மலைகிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வால்பாறை மலைப்பகுதியில் நெடுங்குன்று, வெள்ளிமுடி, கீழ் பூணாச்சி, காடம்பாறை உள்பட 12 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 4 கிராமங்களுக்கு செல்ல மட்டும் சாலை வசதி உள்ளது. நெடுங்குன்று மலை கிராமத்துக்கு செல்ல ஒற்றையடிப் பாதை இருந்தது. இது கரடு முரடான பாதையாக இருந்ததால், சிரமத்துடன் வாகனங்கள் சென்று வந்தன. அங்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்தநிலையில் தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனப்பகுதியில் மலை கிராமங்கள் இருப்பதால், சாலை வசதி செய்து கொடுக்க முடியாத நிலை வனத்துறையினருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் பல்வேறு கட்ட போராட்டத்தை தொடர்ந்து, மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்வதற்கும், கர்ப்பிணிகள், நோயாளிகள் அவசர நேரத்தில் ஆம்புலன்சுகளில் செல்லவும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, 15-வது மத்திய நிதிக்குழுவின் நிதியில் இருந்து ரூ.3 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அணலி எஸ்டேட் பிரிவில் இருந்து நெடுங்குன்று மலை கிராமத்துக்கு 4.6 கி.மீ. தூரம் முதல் முறையாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
தற்போது ஜல்லி கொட்டி சமன்படுத்தி, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் சாலை அமைய உள்ள இடத்தில் இருந்து கிராமத்துக்கு 400 மீட்டர் தூரம் மட்டுமே நடந்து செல்ல வேண்டி இருக்கும். இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து நெடுங்குன்று மலை கிராம வனபாதுகாப்பு குழு உறுப்பினர் கூறுகையில், நெடுங்குன்றில் எங்களது மூதாதையர்களின் 7-வது தலைமுறையை சேர்ந்த நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தற்போது எங்கள் சந்ததியர்களுக்கு சாலை வசதி செய்து கொடுத்து உள்ளோம் என்ற மகிழ்ச்சி உள்ளது. இதற்காக பல ஆண்டுகளாக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், குறிப்பாக வனத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை கொடுத்து வந்தோம். இதற்கு நடவடிக்கை எடுத்த வால்பாறை நகராட்சி மற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu