குடியரசு தின விழா: கோவையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு
குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
குடியரசு தின விழா நாளை மறுநாள் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கி உள்ளன.
கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் காவல்துறையில் சிறப்பாக வேலை பார்த்தவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகர அளவில் 1500 காவல்துறையினரும், மாவட்ட அளவில் 1000 காவல்துறையினரும் என மொத்தமாக 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தற்போது மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பீளமேடு விமானநிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu