ஜெயலலிதா பேனர் அகற்றம்: எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மறியல்

ஜெயலலிதா பேனர் அகற்றம்: எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மறியல்
X
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டம் ஆனைமலையிலும் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க.வினர் தயாராகி வந்தனர்.

இதற்காக ஆனைமலை முக்கோணம் பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், முக்கோணம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை காவல்துறையினர் சட்டவிரோதமாக வைத்ததாக கூறி அகற்றி, காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

இதற்கிடையே இன்று காலை ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

அவர்கள் முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. பேனர்களை காவல்துறையினர் அகற்றியது தெரியவந்ததும், அ.தி.மு.கவினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஆனைமலை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அகற்றப்பட்ட பேனர்களை உடனே இங்கு வைக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டன.

இதையடுத்து அ.தி.மு.கவினர் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.வினரின் போராட்டத்தால் இந்த பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!