நெருங்கும் தீபாவளி: கோவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நெருங்கும் தீபாவளி: கோவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
X
தீபாவளியையொட்டி ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோது கிறது.

நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதிய ஆடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தீபாவளியையொட்டி ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோது கிறது. இன்று வார விடுமுறை என்பதாலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.

ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் ரோடு, டவுன்ஹால், 100 அடி ரோடு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே உள்ளது. மக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையையொட்டி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடைவீதி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை கண்டறிந்து பிடிக்கவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தின் மீது நின்று கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர கடைவீதிகளில் அடிக்கடி நடந்து சென்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர கடைவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனை பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம், நகை திருட வாய்ப்புள்ளது. எனவே திருட்டு சம்பவங்களை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் சீருடையின்றி கடைவீதிகளில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.

திருட்டு வழக்கில் வெளியில் வந்த நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர முக்கிய வீதிகளில் ஜேப்படி திருடர்கள் குறித்து ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!