சிக்னல் பகுதியில் ரோட்டை அடைத்து நிற்கும் இருசக்கர வாகனங்களால் அவதி
தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்
கோவை பொள்ளாச்சி சாலையில் கற்பகம் கல்லூரி சிக்னலுக்கு அடுத்தபடியாக மலுமிச்சம்பட்டி சிக்னல் அமைந்து உள்ளது. இது நான்கு ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இந்த சந்திப்பில் இருந்து நான்கு புறமும் உள்ள சாலைகள் கேரளா, செட்டிபாளையம், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.
மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியை சுற்றிலும் ஏராளமான சிறிய கிராமங்கள் உள்ளன.அந்த பகுதியில் வசிப்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி மலுமிச்சம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் கோவை-பொள்ளாச்சி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் செட்டிபாளையம்-மலுமிச்சம்பட்டி செல்லும் வாகனங்கள் ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது.
மேலும் அப்பகுதியில் எண்ணற்ற பேக்கரி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்த கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் தங்களின் வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசும் நிலையில் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் தினமும் சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், மலுமிச்சம்பட்டி சிக்னலுக்கு எதிரில் புறக்காவல் நிலையம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த வாகனங்களை கண்டுகொள்வதில்லை. காவல்துறையினர் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.
மேலும் அங்கு ஒருசில நேரங்களில் டபுள்பார்க்கிங் போடும் வாய்ப்பு ஏற்படுவதால் வாகனத்தை எடுக்க முடியாமல் ஒருசிலர் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மற்ற வாகனஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பேருந்துகள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன. அப்போது அவை தாறுமாறாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் ஒலி எழுப்புகின்றனர். இதனால் அந்த பகுதியில் எப்போதும் அதிகமானஒலிகளை கேட்க முடிகிறது.
எனவே போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனத்தை முறைப்படுத்தி நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் போக்குவரத்து சீராகும். பிறருக்கும் இடையூறு இருக்காது என கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu