நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அன்னூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. இந்தக் குளம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டமாக குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அன்னூர் சுற்றுவட்டரப் பகுதியில் பெய்து வரும் மழையால் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது.
பல இடங்களில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் காந்திமதி, பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொதுமக்கள் கூறுகையில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் நிரம்பும் நிலையில் உள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மீண்டும் கனமழை பெய்தால் குளம் நிரம்பி குடியிருப்புகளை மழைநீர் சூழ வாய்ப்புள்ளது.
எனவே, அன்னூர் குளத்தில் இருந்து குன்னத்தூராம்பாளையம் குளத்துக்கு செல்லும் நீர்வழிப் பாதையை அளவீடு செய்து, நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குன்னத்தூராம் பாளையம் குளத்துக்கு தடையின்றி மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நீர்வழிப் பாதையை பொதுப்பணித் துறையுடன் இணைந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் காந்திமதி உறுதி அளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu