செந்தில்பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு: கோவை நாளை கண்டன பொதுக்கூட்டம்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் வெள்ளிக்கிழமை கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க கூட்டணி கட்சிகள் அறிவித்தன.
அதன்படி கோவை சிவானந்தா காலனியில் நாளை மாலை 5 மணிக்கு இந்த கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.
மேலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் கட்சி தலைவர் .அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் .காதர் மொகதீன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் .ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்ற உள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பொதுக்கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேரை திரட்டுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைப்பது உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu