அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மூடப்படும்: மாவட்ட கல்வி அலுவலர்
கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எந்த தனியார் பள்ளியும் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. மீறி செயல்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதித்து மூடப்படும். அங்கீகாரம் பெற்றும் புதுப்பித்தல் பெறாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுப் பள்ளிகளுக்காக அங்கீகாரம் பெற்று, பிரைமரி வகுப்புகள் நடத்தினால் முன்னறிவிப்பின்றி பள்ளி மூடப்படும்.
ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், கூரை கட்டிடங்களில் பள்ளி நடத்தக்கூடாது. அத்தகைய பள்ளிகளில் பெற்றோர் மாணவர்களை சேர்க்கக்கூடாது. மாடி கட்டிடங்களில் அல்லது குடியிருப்பு கட்டடங்களில் பள்ளி நடத்தக்கூடாது.
அங்கீகாரம் பெற்றதாக விளம்பரம் செய்து அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு எண் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்கக்கூடாது. விளையாட்டுப் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கி அரசு உத்தரவை மீறி மாலை 6 மணி வரை செயல்படுகிறது. இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கே.ஜி. வகுப்புகள் கட்டடங்களில் மேல் மாடியில் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் வட்டாட்சியர் சான்றிதழ் வழங்கும்போது தனி கான்கிரீட் கட்டடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். குடியிருப்பு, வணிக வளாகம், மாடி கட்டடங்கள் போன்ற பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது. இதுபோன்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கூடாது என்று அரசு உத்தர விட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்த்துவிட்டு, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கல்வித்துறை பொறுப்பு ஏற்காது. பல இடங்களில் அடுக்கு மாடி கட்டடங்களில் கூடுதல் வாடகை பெற்று கட்டட உரிமையாளர்கள் பள்ளி நடத்த அனுமதி வழங்கி வருகின்றனர். இது போன்ற கட்டடங்களில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் கட்டட உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
சிறு குழந்தைகளை அரசு அனுமதியின்றி இதுபோன்று செயல்படும் காப்பகங்கள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகளுக்கு வாடகைக்கு விடும் கட்டட உரிமையாளர் மீது அரசு அனுமதியுடன் காவல்துறை உதவியுடன் கடும் நடடிவக்கை எடுக்கப்படும்.
ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தகுதியான பள்ளிகள் விபரம் பலகையில் ஒட்டப்படும். கோவை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட விளையாட்டு பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது போன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu