பிரதமர் மோடி வருகை: கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 27ம் தேதி மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சூலூர் விமான படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சூலூர் விமான படை தளத்தை சுற்றிலும் 3 அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சோதனைச்சாவடிகளுடன் மேலும் 3 சோதனைச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
விமானப்படை தளத்தை சுற்றி 500 மீட்டர் அளவில் உள்ள குடியிருப்புகள் மற்றும் குடியிருந்து வருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கோவை மற்றும் சூலூரில் உள்ள லாட்ஜ், ஓட்டல்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். சந்தேகப்படும்படியாக புதிய நபர்கள் யாராவது வந்து தங்கினால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஓட்டல் ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். சூலூர் மட்டுமல்லாமல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் காவல்துறையினர் மட்டுமல்லாமல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், சி.ஆர்.பி.எப். வீரர்களும் வர உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu