செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த கர்ப்பிணி உட்பட 7 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி ஜல்லிப்பட்டி. இப்பகுதியில் செயல்பட்டு வரும் மாசிலாமணி சொந்தமான செங்கல் சூளையில், திருப்பூர் மாவட்டம் கணியூர் கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூபாய் ஒரு லட்சம் முன்பணமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்திற்கு வாரம் ரூ.1000 மட்டுமே சம்பளமாக வழங்கி, இவர்களை செங்கல் சூளை உரிமையாளர் கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு பிற இடங்களுக்கு பணிக்கு சென்று வர விடாமல் தடுத்தும், போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தடுத்து வருவதாக விழுதுகள் என்ற தன்னார்வு அமைப்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தது.
அதன் பேரில், கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் மீட்பு இயக்க திட்ட அதிகாரிகள் செங்கல் சூளையில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 13 வயது சிறுவன் 15 வயது சிறுமி மற்றும் 9 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஏழு பேரும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அதில் கடந்த ஆறு மாத காலமாக கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது. இதை எடுத்து அவர்களுக்கு விடுதலை சான்றிதழ் வழங்குவதாகவும், கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu