வெளிமாநில மக்களின் தாகம் தீர்க்கும் பொள்ளாச்சி இளநீர்
வெளிமாநிலங்களுக்கு அனுப்ப பொள்ளாச்சியில், லாரியில் ஏற்றப்படும் இளநீர் காய்கள்.
பொள்ளாச்சி, ஆனைமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் 5 லட்சம் இளநீர் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான ஏக்கர்களில், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காணப்படுகின்றன. தேங்காய் உற்பத்தியில், முக்கிய பகுதியாக பொள்ளாச்சி, ஆலைமலை பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் விளையும் இளநீர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது இளநீர் உற்பத்தி அதிகரித்தால், விலை குறைந்துள்ளது. மேலும் தேவை அதிகமாக இருப்பதால் .இளநீர், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது; பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை பகுதிகளில் இருந்து முதலில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இளநீர் லாரி மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் இருந்து இளநீர் உற்பத்தி குறைய தொடங்கும். ஆனால் நவம்பர் முதல் ஜனவரி வரை இளநீர் உற்பத்தி அதிகமாக இருக்கும். கடந்த மாதம் இளநீர் ரூ.24-க்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர். தற்போது ரூ.17-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று ஒரு டன் இளநீர் விலை ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக குறைந்து விட்டது. கடந்த மாதம் மழை காரணமாக மரங்களில் இளநீர் வெட்டப்படாமல் இருந்தது. தற்போது மழை இல்லாததாலும், வரத்து அதிகரிப்பு காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில் இருந்து தினமும் 5 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இளநீர் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் மும்பைக்கு அதிகமாக ஏற்றுமதி ஆகிறது. தமிழகத்தில் மழை குறைந்து உள்ளதால், இளநீர் தேவை அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெயில் காலங்களில், இளநீர் தேவை தமிழகத்தில் அதிகரித்து காணப்படும். அந்த காலகட்டத்தில், ஒரு இளநீர் ரூ. 40 வரை கூட விற்கக்கூடும். பிரதான ரோடுகள் மட்டுமின்றி டூவீலர்கள் மற்றும் வேன்களில் கொண்டுவந்தும் ஆங்காங்கு இளநீர் விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது குளிர்காலமாக இருப்பதால், தமிழகத்தில் இளநீர் நுகர்வு, கணிசமாக குறைந்து காணப்படுகிறது. எனினும், சபரிமலை சீசன் என்பதால், விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் இளநீர் விரும்பி வாங்கி குடிக்கின்றனர். ஏனெனில், இளநீர் மிக விரைவில் களைப்பை நீக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu