சென்னை எழும்பூருக்கு இரவு நேர ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை
பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக சென்னைக்கு நேரடியாக இரவு நேர தினசரி விரைவு ரயில் இயக்க, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து, வியாபாரம் சார்ந்தும், அலுவல் மற்றும் தொழில் சார்ந்தும் ஏராளமான மக்கள் சென்னை செல்வது, அத்யாவசியமாக மாறிவிட்டது. எனவே, பொள்ளாச்சியில் இருந்து, உடுமலை வழியாக சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்துக்கு நேரடியாக இரவு நேர தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள், ரயில்வே துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சி, தென்னை மற்றும் காயர் பொருட்களின் உற்பத்தியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது. ஆனால் ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதிகளில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், சென்னை தாம்பரம், எழும்பூர் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக ரயில் சேவை இல்லை. பழனி முருகன் கோவில், வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில், உடுமலை திருமூர்த்திமலை கோவில், மூணாறு, கொடைக்கானல் உள்ளிட்ட ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன.
மேலும் தஞ்சையில் பெரிய கோவில், சனீஸ்வரர், சுவாமி மலை கோவில்கள் உள்ளன. பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பழனி பகுதிகளில் இருந்து, பல ஆயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் (தகவல் தொழில்நுட்பம் உட்பட) மற்றும் அரசு துறை ஊழியர்கள் சென்னையில் பணிபுரிகின்றனர்.
தற்போது, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும், பாலக்காடு - சென்னை தினசரி விரைவு ரயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் நேரம் (மாலை, 4:55 மணி ) அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வசதியாக இல்லை. திண்டுக்கல், நாமக்கல், சேலம் வழியாக மிகவும் சுற்றுப்பாதையில் செல்வதால் பயண நேரம் அதிகமாகவும், ரயில் கட்டணம் அதிகமாகவும் உள்ளது. அதுபோன்று, பொள்ளாச்சியில் இருந்து தொலைவான பகுதிகளான வால்பாறை,சேத்துமடை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வருவதற்கு ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது.
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அலுவலக பணிகளை முடிக்க மாலை 6 மணியாகும். எனவே பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்திற்கு, பழனி, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம் வழியாக நேரடி இரவு நேர தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்படும் நேரத்தை இரவு 8 மணி முதல் 10மணிக்குள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல, சென்னை எழும்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு புறப்படும் நேரத்தை இரவு 8மணி முதல் 10 மணிக்குள் இருக்கும்படி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu