பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம் இன்று
பேரூர் பட்டீசுவரர் திருக்கல்யாண உற்சவ விழா
கோவையை அடுத்த பேரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பட்டீசுரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மாலை யாகசாலை பூஜையும், காலைதோறும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், யாகசாலை பூஜைகளும் நடந்தது.
பின்னர், நேற்று இரவு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. இதில், பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மனுக்கு பட்டாடை மற்றும் ஆபரணங்கள் சாத்தப்பட்டு, ஹோமங்கள் நடந்தன. இரவு 10 மணிக்கு மேல் பச்சைநாயகி அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டது.
அதன் பிறகு பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மனுக்கு, மகாதீபாராதனை காட்டப்பட்டு, திருப்பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில், பக்தர்கள் அனைவரும் பாதநமஸ்காரம் செய்து திருக்கல்யாண மொய் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர், வெள்ளையானை மீது அமர்ந்து பட்டீசுவரரும், பச்சைநாயகி அம்மனும் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள், தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதையடுத்து, முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. இதில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு தெப்பத் திருவிழாவும், 5-ந் தேதி யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது.
இரவு 8 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது. தேர்த்திருவிழாவையொட்டி பொதுமக்கள், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu