தூத்துக்குடி-கோவை ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி கோவை விரைவு ரயில் - கோப்புப்படம்
தூத்துக்குடி-கோவை இடையே ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
கொரோனாவுக்கு முன்பு வரை தூத்துக்குடியில் இருந்து 7 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைத்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ல் நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதில், இந்த ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
ஆனால், நிலைமை சீரானபிறகு இந்த ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போத்தனூர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி அளித்துள்ள பதிலில், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாரம் மூன்று முறை ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறுகையில், துறைமுக நகரமான தூத்துக்குடியில் இருந்து நிறைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், பொள்ளாட்சி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் பல பொருட்கள் ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, சரக்குகளை ஏற்றிச்செல்ல இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்
மேலும் கடல் மீனுக்கான சந்தை வாய்ப்பு இங்கு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து இரவில் மீன்களை ரயிலில் ஏற்றி அனுப்பினால், காலையில் அவை இங்கு வந்து சேர்ந்து விடும். இதனால் வியாபாரிகள் பயன்பெறுவர்.
நீலகிரியில் விளையும் பல்வேறு காய்கறிகளை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லவும் இந்த ரயில் பயன்படும். பயணிகளைப் பொருத்தவரை, திருச்செந்தூர், பழநி முருகன் கோவில்கள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று வரமுடியும்.
தென் மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் கோவையில் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பேருந்துகளையே அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கும் இந்த ரயில் பயன்தரும். மேட்டுப்பாளையத்துக்கு நேரடியாக இந்த ரயிலை இயக்கும்போது, தென் மாவட்ட மக்கள் சுற்றுலாவுக்காக நீலகிரி வந்து செல்ல முடியும் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu