கோவையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
விசைத்தறி, கைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் .ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு கோவை வந்தார்.
விமான நிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மகாலுக்கு சென்றார்.
விமான நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை சாலையின் இருபுறமும் தொண்டர்கள் நின்று கொண்டு உற்சாகமாக வரவேற்றனர். முதலமைச்சர் அவர்களை பார்த்து பதிலுக்கு கையசைத்து, கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் அவர் விழா மேடைக்கு வந்தார். அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 6 ஆயிரம் பேர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். அவர்களை முதலமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்று உரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:
திமுகவை போல் வெற்றிபெற்ற கட்சியும் இல்லை, தோல்வியடைந்த கட்சியும் இல்லை. இந்திரா காந்தியின் எச்சரிக்கையை மீறி நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி.
ஆட்சியை பற்றி கவலைப்படாமல் ஜனநாயம், மக்களுக்காக குரல் கொடுத்தவர் கருணாநிதி. சொல்லாமல் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.
நாடாளுமன்ற தேர்தல் பணியை தற்போதே தொடங்க வேண்டும். திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது
2024 மக்களவை தேர்தலும் திமுக கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அண்ணா திமுகவை தொடங்கியது ஆட்சிக்காக இல்லை, தமிழினத்துக்காக தொடங்கப்பட்டது தான் திமுக இயக்கம். முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போய்விட்டன. சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்களது முயற்சி பலிக்காது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்று முதலே உழைக்க வேண்டும் என்றார்.
விழாவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் ஏற்பாட்டில் இணைப்பு விழா நடந்தது. அவர், மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் நினைவுப்பரிசு வழங்கினார்.
அமைச்சர்கள் முத்துசாமி, காந்தி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu