ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு: ஊட்டி மலை ரயில் சேவை ரத்து
ஊட்டி மலைரயில் பாதையில் உருண்டு விழுந்த பாறைகள்
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்தால் வழியில் இருக்கும் குகைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டுகளிக்க முடியும்.
எனவே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரயிலில் பயணம் செல்ல அதிகம் விரும்புவர்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், சாலையோர மரங்கள் முறிந்து விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரயில் பாதையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் மலைரயில் போக்குவரத்து ஏற்கனவே 2 தடவைகள் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் அங்கு சீரமைப்பு பணிகள் முடிந்தன. தொடர்ந்து கடந்த 19ம் தேதி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில்குரோவ் இடையே 3 பகுதிகளில் தண்டவாள பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன.
மேலும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தை மணல் மூடியது. பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. எனவே தண்டவாளப்பாதைகள் அந்தரத்தில் தொங்கின.
இதற்கிடையே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் மலைரயில் இன்று காலை 7:10 மணிக்கு புறப்பட்டது. அப்போது ஹில்குரோவ் அருகே 3 இடங்களில் தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து மலைரயில் கல்லாறு பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து மலை ரயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் எடுத்திருந்த சுற்றுலா பயணிகளிடம் கட்டணத்தொகை திருப்பி தரப்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மண்சரிவு பற்றிய தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தற்போது 25-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரயில் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu