விவசாயிகள் விருப்பமில்லாமல் நிலம் கையப்படுத்தப்படாது: அமைச்சா் உறுதி

விவசாயிகள் விருப்பமில்லாமல் நிலம் கையப்படுத்தப்படாது: அமைச்சா் உறுதி
X

விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி 

வாரப்பட்டி தொழிற்பூங்காவுக்கு விவசாயிகள், பொதுமக்கள் அனுமதியில்லாமல் நிலம் கையகப்படுத்தப்படாது என்று அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்

கோவை மாவட்டம், சூலூா் வட்டம் வாரப்பட்டி, புளியம்பட்டி, செலக்கரிச்சல், ராமகிருஷ்ணாபுரம் மற்றும் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருசில கிராமங்களை உள்ளடக்கி 420 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வாரப்பட்டியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வாரப்பட்டி தொழிற்பூங்கா திட்டம் தொடா்பாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி 15க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கோவை, திருப்பூா் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அச்சத்தை போக்கும் விதமாக தொழிற்பூங்கா திட்டத்துக்கு நில உரிமையாளா்களின் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளார். விவசாயிகள், பொதுமக்கள் அனுமதியில்லாமல் நிலம் கையகப்படுத்தப்படாது.

தொழில் நிறுவனங்களின் நிலங்களை மட்டுமே அரசு எடுக்கும். இப்பகுதியிலுள்ள நீா்நிலைகள், காற்று மாசுபடும் வகையிலான தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கப்படாது. எனவே, அரசின் வாக்குறுதியை ஏற்று விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார் .

இது தொடா்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீா்நிலைகள், காற்று மாசுபடுத்தும் வகையிலான தொழிற்சாலைகள் அமைக்கப்படாது என்றும், நில உரிமையாளா்களின் அனுமதியில்லாமல் நிலம் கையகப்படுத்தப்படாது என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும், காத்திருப்புப் போராட்டத்தை கைவிடுவது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொதுமக்களுடன் கலந்தாலேசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று கூறினர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்