கிராஸ்ஹில்ஸ் பகுதியில் வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பு
வரையாடு - கோப்புப்படம்
தமிழகத்தின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட வனப்பகுதிகளில், இதன் நடமாட்டத்தை காண முடிகிறது. ரோட்டோரம் கூட்டமாக நிற்கும் வரையாடுகள் பார்வைக்கு விருந்தளிக்கின்றன.
மாநில விலங்கு என்ற கௌரவம் இருந்தாலும், இதன் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வருகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு, 25 கோடி ரூபாயில், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை கடந்தாண்டு துவங்கியது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நீலகிரி வரையாடுகள் பற்றிய கணக்கெடுப்பு பணி துவங்குவதற்கு முன்னோட்டமாக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் குழுவினர் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதில், திட்ட இயக்குனராக கணேசன், உதவி திட்ட இயக்குனராக கணேஷ்ராம் மற்றும் ஐந்து சயின்டிஸ்ட்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு திட்டமாக உள்ள இக்குழு வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது
சில நாட்களுக்கு முன், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாகு தலைமையில், வரையாடுகள் பாதுகாப்பு திட்ட குழுவினர், வரையாடுகள் வாழ்விட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வரையாடுகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது, அங்கு வளர்ந்துள்ள களைச்செடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளுதல் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியில் வரையாடுகளின் வாழ்விடம் ஆய்வு செய்யப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு, ஐந்தாண்டு திட்டமாக நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதுவரை நீலகிரி வரையாடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படாமல் உள்ளது.
மற்ற விலங்குகள் குறித்த விபரங்கள் உள்ள நிலையில், வனத்துறை வாயிலாக வரையாடுகள் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.வரையாடுகள் ஆங்காங்கே தென்பட்டாலும், அதிகமாக முக்கூர்த்தி தேசிய வனப்பூங்கா மற்றும் வால்பாறை அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியில் உள்ளது.
இப்பகுதிகளில் வரையாடுகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதற்கட்டமாக, 'பைலட் ஸ்டடி' முறையில், கிராஸ்ஹில்ஸ் வனப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது முன்மாதிரி கணக்கெடுப்பு எனக்கொள்ளலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில், நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவற்றையும், அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu