தொழிற்பூங்கா அமைக்க இடைவெளி இல்லாமல் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

தொழிற்பூங்கா அமைக்க இடைவெளி இல்லாமல் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
X
சூலூரில் தொழிற்பூங்கா அமைக்க சூலூர் விமானப்படை தளத்தின் சுற்றுச்சுவருக்கு அருகே 100 மீட்டர் இடைவெளி விட்டு நிலம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது

சூலூரில் தொழிற்பூங்கா அமைக்க, விமானப்படை தளம் அருகே உள்ள நிலத்தை கையகப்படுத்தும்போது, 100 மீட்டர் இடைவெளி விடாமல், முழுமையாக எடுத்துக் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் வளர்ச்சிக்காக, சூலூர் விமானப்படை தளம் அருகே தொழிற்பூங்கா அமைக்க, திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பருவாய் கிராமத்தில், 85.47 ஏக்கர் பட்டா நிலம், 0.90 ஏக்கர் புறம்போக்கு நிலம் என, 86.37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் சூலூர் வட்டம் அப்பநாயக்கன்பட்டி, காடம்பாடி மற்றும் காங்கயம்பாளையம் கிராமங்களில், 111.77 ஏக்கர் பட்டா நிலங்கள், 0.99 புறம்போக்கு நிலங்கள் என, 112.76 ஏக்கர் சேர்த்து, 199.13 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டு, ரூ.153.83 கோடி ஒதுக்கியிருக்கிறது

இந்நிலையில், சூலூர் விமானப்படை தளத்தின் சுற்றுச்சுவருக்கு அருகே, 100 மீட்டர் இடைவெளி விட்டு, நிலம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது, அப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, காங்கயம்பாளையம், காடாம்பாடி, பருவாய், அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள், சூலூர் மற்றும் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், கோவை ஆட்சியர் கிராந்திகுமாரை சந்தித்து முறையிட்டனர்.

அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளதாவது: எங்களது நிலங்கள், சூலூர் விமானப்படை தளத்தை ஒட்டி அமைந்திருக்கின்றன. இங்கு விவசாயத்தை தவிர, வேறெந்த தொழிலோ அல்லது வீட்டுமனை பிரிவுகளோ ஏற்படுத்த முடிவதில்லை. ஆட்சேபனைகளால் பத்திரப்பதிவுகள் நடைபெறுவதில்லை. வழிகாட்டி மதிப்பும் குறைவாக இருக்கிறது.

தொழிற்பூங்கா அமைக்க, விமானப்படை தளத்துக்கு அருகாமையில் உள்ள நிலங்கள் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன் வீடுகள் மற்றும் தென்னை மரங்கள் போன்றவை, அரசு அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டன. அதன்பின், எவ்வித தகவலும் இல்லை.

தற்போது 1997ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி, தொழிற்பூங்கா அமைக்க நிலம் எடுக்க உள்ளதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. முதலில், தொழிற்பூங்காவுக்கு, 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது; இப்போது, 40 ஏக்கர் குறைவாக, விமானப்படை தளத்தின் பாதுகாப்பு சுவர் அருகில், 100 மீட்டர் இடைவெளி விட்டு, இடம் கையகப்படுத்துவதாக கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

இடைவெளி விட்டு நிலம் கையகப்படுத்தினால், எங்களது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும். 100 மீட்டருக்குள் கிணறு இல்லாமல் இருந்தால் விவசாயம் செய்யவும் முடியாது, நிலங்களுக்குச் செல்ல பாதையும் சாத்தியமாகாது.

ஒருபுறம் விமானப்படைத்தள சுவர், மறுபுறம் தொழிற்பூங்காவுக்கான சுவர் அமைந்தால், இடைப்பட்ட 100 மீட்டர் நிலத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், எதுவும் செய்ய முடியாது.

எனவே நிலம் கையகப்படுத்துவதாக இருந்தால், 100 மீட்டர் இடைவெளி விடாமல், முழுப்பகுதிக்கும் இழப்பீடு வழங்கி, வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!