தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீடுகளில் கர்நாடகா போலீஸ் அதிரடி சோதனை

தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீடுகளில் கர்நாடகா போலீஸ் அதிரடி சோதனை
X

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று, நீதிமன்ற உத்தரவை காண்பித்து விட்டு சோதனை மேற்கொண்டனர்.

தி.மு.க முன்னாள் அமைச்சரும், சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி கோவை பீளமேட்டில் வசித்து வருகிறார். இவரது பெயரில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு கற்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவர் நடத்தி வரும் கல்குவாரிகள், அரசின் விதியை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து காவல்துறையினர் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கல்குவாரி உரிமையாளரான பொங்கலூர் பழனிசாமியின் வீட்டில் சோதனை நடத்த கர்நாடக மாநில காவல்துறையினர் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் சோதனை மேற்கொள்ள கர்நாடக காவல்துறையினருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து 15 பேர் கொண்ட கர்நாடக மாநில காவல்துறை குழுவினர் இன்று காலை நீதிமன்ற உத்தரவுடன் கோவைக்கு வந்தனர்.

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று, நீதிமன்ற உத்தரவை காண்பித்து விட்டு சோதனை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் சோதனையிட்டனர்.

இந்த வீட்டில் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வசித்து வருகிறார். இவர் தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இதேபோல் பீளமேட்டில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் கர்நாடக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக காவல்துறையினர்சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!