தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆர்வம் இல்லை.. தேசிய காவலர் பயிற்சி பள்ளி அகாடெமி இயக்குநர் ராஜன் பேட்டி..
தேசிய காவலர் பயிற்சி பள்ளி அகாடெமி இயக்குநர் ராஜன்.
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகாடெமியின் இயக்குநர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அதை தவறாக பயன்படுத்துவதால் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகாடெமியின் இயக்குநர் ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வித் துறை, மருத்துவத் துறை போல காவல் துறையும் சேவை மனப்பான்மையுடன் இருக்கும் துறைதான். காவல் அதிகாரிகளாக 20 சதவீதம் வரை பெண்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். மருத்துவத் துறையை போல காவல் துறையிலும் ஏராளமான பெண்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
காவல் துறையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கின்றது. நீதித் துறையின் முதல்கட்டமே காவல் துறைதான். இதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். பெண்களால் காவல் துறையில் சிறப்பாக செயல்பட முடியும்.
மேலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு, அதிகளவு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் வருவது குறைந்து உள்ளது உண்மைதான். மருத்துவராக வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணங்களும் அதற்கு ஒரு காரணம் ஆகும்.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு முயற்சிப்பவர்களிடம் கலந்துரையாடல் குறைந்து விட்டது. புதுமையான சிந்தனைகள் குறைந்து இருக்கிறது. மேலும், கேள்வி முறைகளும் மாறி இருக்கிறது. அண்டை மாநிலங்களை பற்றி கூட விவரம் தெரியாமல் இருந்தநிலை மாறி, தற்போது, அப்படி இல்லாமல் உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது புதிய வகையான பயிற்சிகள் அளிக்கபடுகின்றன. தொழில் நுட்ப ரீதியாக கையாள்வது, ஊடகங்களை கையாள்வது, கடலோர மாநிலங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல், சைபர் கிரைம் தொடர்பான பணிகள் ஆகிய புதிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
மேலும், 6 பகுதிகளாக மக்களை பிரித்து எந்த மாதிரியான அதிகாரிகளை மக்கள் விரும்புகின்றனர் என ஆய்வு நடத்தப்படுகின்றது. காவல் துறையில் இருந்தவர்கள், 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஐபிஎஸ் அதிகாரிகள், பொது மக்கள், ஊடகத்துறை, நீதித்துறை, தொண்டு நிறுவனங்கள் என அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி முறைகளில் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது.
நாட்டில் 1947 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை 40 ஆயிரம் போலீஸார் உயிரிழந்து இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள், சமூக வலைதளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பது முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும். அதை அறிவை வளர்த்து கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகாடெமியின் இயக்குநர் ராஜன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu