கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது.. என்ஐஏ அதிகாரிகள் அதிரடி…
கோவையில் இன்று கைது செய்யப்பட்ட சனோபர் அலி மற்றும் ஷேக் ஹிதயத்துல்லா.
கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை உக்கடம் பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில் முன்பாக நின்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் காரில் இருந்த குண்டு வெடித்ததாக தகவல் பரவியது.
தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் 6 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும், உயிரிழந்த ஜமோஷா முபின் எங்கு பயிற்சி பெற்றார்? அவர் எங்கெல்லாம் சென்றார்? யாரை எல்லாம் சந்தித்தார்? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் 5 பேரையும் 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து ஐந்து பேரிடம் பல்வேறு கோணங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேரையும் கோவை அழைத்து வந்து 5 பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும், உக்கடம் புல்லுக்காடு, கோட்டைமேடு, லாரி பேட்டை, அல் அமீன் காலனி, பிளால் எஸ்டேட், ஜி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் எங்கெங்கு சென்றார்கள், யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
5 பேருக்கும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை விசாரணை நடத்த கால அவகாசம் உள்ள நிலையில், இன்று உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்த ஷேக் ஹிதயத்துல்லா மற்றும் உக்கடம் வின்செண்ட் சாலை பகுதியை சேர்ந்த சனோபர் அலி ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சதி செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஷேக் ஹிதயத்துல்லாவிடம் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொச்சி என்ஐஏ அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu