தயாராக இருந்த சிறப்பு பேருந்துகள், பயணிக்க வராத பயணிகள்

தயாராக இருந்த சிறப்பு பேருந்துகள், பயணிக்க வராத பயணிகள்
X

கோப்புப்படம் 

கோவையில் அதிக சிறப்பு பேருந்துகளை தயார்நிலையில் வைத்திருந்தும், அதில் பயணிக்க போதுமான பயணிகள் வரவில்லை.

சரஸ்வதி, ஆயுதபூஜையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக்கழகம் வெளியூர் செல்ல அதிக பேருந்துகளை தயார்நிலையில் வைத்திருந்தும், அதில் பயணிக்க போதுமான பயணிகள் வரவில்லை. போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதனால் ஏமாற்றமடைந்தனர். இதனால், தீபாவளிக்கு பேருந்துகளில் அதிக கூட்டம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

சனி, ஞாயிறு தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைகள் வருகின்றன. 'நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், பெரும்பாலான மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வர்; அப்போது சிரமம் இருக்கக்கூடாது' என்பதற்காக, அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கமான பேருந்துகள் அல்லாமல், 220 சிறப்பு பேருந்துகளை, தயார் நிலையில் வைத்திருந்தது.

கோவை காந்திபுரத்திலிருந்து சேலத்திற்கு 70 பேருந்துகள், ஊட்டிக்கு 20, சிங்காநல்லுாரிலிருந்து மதுரை, திருச்சிக்கு தலா 50 பேருந்துகள், தேனிக்கு 20 பேருந்துகள், திண்டுக்கல்லுக்கு 10 பேருந்துகள் என்று மொத்தம் 220 பேருந்துகளை இயக்க, அந்தந்த பேருந்து நிலையங்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். பேருந்துகளும் தயாராக இருந்தன

ஆனால், எதிர்பார்த்தது போல் வெளியூர்களுக்கு செல்ல, பெரியளவில் பயணிகள் கூட்டம் வரவில்லை. பேருந்துகளை தயார் நிலையில் வைத்து அதற்கேற்ப ஓட்டுநர் நடத்துநர்களையும் நியமித்து காத்திருந்த போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு, இது பெருத்த ஏமாற்றமாகி விட்டது. உடனடியாக ஓட்டுநர் நடத்துநர்களுக்கு விடுப்பு அளித்து, வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நவராத்திரி விழா விடுமுறையை முன்னிட்டு வந்ததால், நான்கு நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் அதிகம் பேர் சொந்த ஊர் திரும்புவர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கும், நவராத்திரி விழாவுக்கும் பெரியளவில் நாள் இடைவெளி இல்லாததால், பெரும்பாலானோர் ஊருக்கு செல்லவில்லை.

இதனால் தயார் நிலையில் வைத்திருந்த 220 பேருந்துகளில், நுாறு பேருந்துகள் கூட வெளியூர்களுக்கு இயக்கப்படவில்லை. மீதமுள்ள, 120 பேருந்துகளை நாங்கள் பணிமனையை விட்டு, வெளியேகூட வரவில்லை. அதனால் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு விடுப்பு அளிக்க முடிந்தது.

நவராத்திரியில் வெளியூர் செல்ல, பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு கூட்டம் அதிகரிக்கும். பயணிகள் வருகைக்கு ஏற்ப, அதிக பேருந்துகளை இயக்குவதற்கு, அரசு போக்குவரத்துக்கழகம் தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!