கோவையில் மிளகாய் பொடி தூவி பணம், செல்போன் பறிப்பு: மூவர் கைது

கோவையில் மிளகாய் பொடி தூவி பணம், செல்போன் பறிப்பு: மூவர் கைது
X

கோப்புப்படம் 

கார் விற்பனைக்கு இருப்பதாக வரவழைத்து மிளகாய் பொடி தூவி பணம், செல்போன் பறித்து தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

கோவை மாவட்டம் ஆனைமலை மாசானியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சொந்தமாக மினிலாரி வைத்து ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் அருண்குமார் கார் வாங்க திட்டமிட்டார். இதற்காக அவரது பேஸ்புக் பக்கத்தில் நல்ல நிலையில் உள்ள பழைய கார்கள் விற்பனைக்கு போடப்பட்டு உள்ளதா என பார்த்தார். அப்போது விஜய் ஜாஸ்மின் என்பவர் ஐ.டி.யில் 2009-ம் ஆண்டு கார் விற்பனை உள்ளதாக போடப்பட்டு இருந்தது. இதனையடுத்து அருண்குமார் அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது பேசிய நபர் கோட்டை பிரிவில் கார் உள்ளது எனவும் நேரில் வந்தால் பேசி முடித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து அருண்குமார் தனது நண்பர் சபரிநாதன் என்பவருடன் கோட்டை பிரிவிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கார் ஒண்ணியம்பாளையத்தில் உள்ளது. அங்கு சென்றால் காரை பார்த்து கொள்ளலாம் என கூறி இருவரையும் காரில் ஏற்றி சென்றார்.

கார் கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென அந்த நபர் மறைத்து வைத்து இருந்த மிளகாய் பொடியை எடுத்து அருண்குமார் அவரது நண்பர் சபரிநாதன் ஆகியோரின் கண்களில் வீசியுள்ளார். பின்னர் சபரிநாதன் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தையும் செல்போனையும் கொடுக்குமாறு மிரட்டினார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு வாலிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து அருண்குமாரின் தலை மற்றும் கழுத்தில் குத்தி, அவர் வைத்து இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அருண்குமார் மற்றும் சபரிநாதன் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருண்குமார் பெரிய நாயக்கன் பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார் விற்பனைக்கு இருப்பதாக கூறி வரவழைத்து மிளகாய் பொடி தூவி பீர்பாட்டிலால் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்த எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் ஸ்டீபன்ராஜ், தாமுநகரை சேர்ந்த எம்.எஸ்.சி. ஐ.டி இறுதியாண்டு படிக்கும் மாணவர் சக்தி பிரசாத், வீரபாண்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த பி.எஸ்.சி. ஐ.டி. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சாம்சன் மேத்யூ என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself