அனைத்துக் கோயில்களிலும் விரைவில் அறங்காவலர்கள் நியமனம்.. கோவையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி..
கோவையில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்தார்.
கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோயில் யானைக்காக புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பேரூர் ஆதினத்தில் நடந்த அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.
அதன் பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
84 அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு தீட்சிதை அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவக்க அரசாணை வெளியிட்டதன் பேரில் 2007 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டது.
கடந்த காலங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் பயிற்சி பெற தரம் இல்லாத நிலை இருந்தது. தற்போது, அந்த பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய பள்ளிகள் துவக்கவும் முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 நிலையில் பயிற்சி பெற 15 பள்ளிகள் துவங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 27 திருக்கோயில்களில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த யானைகளுக்கு குளியல் தொட்டிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படுகிறது.
தமிழக அரசு மனிதர்கள், யானைகள் நலன் காக்கும் அரசாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையில் இருந்த தொய்வான நிலையை அகற்றி, பக்தர்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வருகிறது. பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் வானதி சீவாசனுக்கு வாடிக்கையாக உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்த நிலையில், அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.
திருக்கோயிலில் அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியதாலும், திருக்கோயிலை வைத்து வருமானம் பார்ப்பவர்களை முடக்கியதாலும் தேவையற்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. பழநிக்கு பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 5 இடங்களில் வெகுவிமர்சையாக சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 17 திருக்கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். விரைவில் அனைத்து கோயில்களிலும் நியமனம் செய்யப்படுவார்கள்.
மருதமலை கோயில் அறங்காவலர் விரைவில் நியமனம் செய்யப்படுவார். கோயில்களில் சிறப்பு கட்டணம் ரத்து செய்யும் நிலையில், பூஜை உள்ளிட்டவை பாதிக்காத நிலையில் முறைப்படுத்தப்படும். சிறப்புக் கட்டணத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மருதமலை சுப்பிரமணியர் கோயிலில் லிஃப்ட் அமைக்க ஒப்பந்தம் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் துவக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu