ஹெல்த் வாக் திட்டம்: கோவையில் அமைச்சர் ஆய்வு
நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன்
தமிழகத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ள ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் நடைபயிற்சி மேற்கொள்ள கோவையில் இடம் தேர்வு செய்யும் பணியை அவர் இன்று காலை ஆய்வு செய்தார். கோவை ரேஸ்கோர்ஸ் முதல் வாலாங்குளம் வரையிலான 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை அவர் மேற்கொண்டார். இதற்காக அவர் 8 கிலோ மீட்டர் நடந்தே சென்றார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில். தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதலமைச்சர் ஸ்டாலின் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
ஜப்பான் டோக்கியோ சென்ற போது அங்கு 8 கிலோமீட்டர் தூரம் ஹெல்த் வாக் ரோடு அமைக்கப்பட்டு இருந்தது. மனிதர்கள் தினந்தோறும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் சீராக இருக்கும்.
இதேபோல் தமிழகத்தில் 38 வருவாய் மாவட்ட தலைநகரங்களில் 8 கிலோ மீட்டர் நடைபாதையை அமைத்து மரம், இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடி வெடுத்துள்ளோம்.
மக்களை நடப்பதற்கு பயிற்றுவிக்கும் வகையில் இந்த நடைபாதை அமைக்கப்படுகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடந்தது.
கடந்த வாரம் மதுரையில் 8 கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பாதையை தேர்வு செய்து பணிகளை செய்து வருகிறார்கள். விரைவில் முதலமைச்சர் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் நடைபாதைகளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்திலேயே சிறந்த நடைபாதை இடம் கோவை ரேஸ்கோர்சாக உள்ளது. வாலாங்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைப்பது போன்ற பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது என்று கூறினார்.
அவருடன் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu