கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை.
கோவை மாவட்டம், துடியலூர் அடுத்த வரப்பாளையம், பன்னிமடை பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் ஏராளமான யானைகள் இந்த பகுதி வழியாக வலசை சென்று தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வரப்பாளையம் கிராமத்திற்குள் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.
இதனையடுத்து தகவலின்பேரில் உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டியுள்ளனர்.
ஆனால், இன்று காலை மனோகரின் வாழை தோட்டத்தில் யானை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் உயிரிழந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும் அதன் தும்பிக்கை மின்வேலியில் சிக்கி இறந்து இருப்பதும் தெரியவந்தது.
வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மின் வாரிய அதிகாரிகள், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் சம்பவ நடந்த தோட்டத்தை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து யானை இறப்பு குறித்து தோட்ட உரிமையாளர் மனோகரனிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu