காட்டு யானையை கண்டா வரச்சொல்லுங்க: கோவையில் தொடங்கியது 'ஆப்பரேஷன் பாகுபலி'
ரேடியோ காலர் பொருத்தும் பணிக்காக, “ஆப்பரேஷன் பாகுபலி’ தொடங்கியுள்ள கோவை வனத்துறையினர்.
கோவை மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று நடமாடுகிறது. இரவு நேரங்களில், அது குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த வருகிறது. இந்த யானையின் திடகாத்திரமான உடல்வாகு காரணமாக, இப்பகுதி மக்கள் பாகுபலி யானை என்று அதை அழைத்து வருகிறார்கள்.
பாகுபலி யானை தற்போது வரை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை; எனினும், உணவுக்காக விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் யானையை அடர்வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள், வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பாகுபலி யானையை பிடித்து ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொறுத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து, கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த யானைகளின் உதவியுடன், மருத்துவக்குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து, பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் இன்று தொடங்கியுள்ளனர். இதற்காக மேட்டுப்பாளையம் மரக்கிடங்கு பகுதியில் நேற்று வனச்சரகர்கள் பழனிராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஒரு வனவர் மற்றும் 5 வனக்காவலர்கள் என தலா 6 பேர் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவினர், மேட்டுப்பாளையம் வேடர் காலனியை ஒட்டியுள்ள வனப்பகுதியில், 'ஆப்பரேஷன் பாகுபலி' என்ற பெயரில் தற்போது யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடன், வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
பாகுபலி யானையை, கும்கி யானைகளின் உதவியுடன் மேடு பள்ளங்கள் இல்லாத சமதள பரப்புக்கு அழைத்து வந்து மயக்க ஊசி செலுத்தி, அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும் எனவும் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் யானை வருவதை தடுத்து வனப்பகுதிக்குள் எளிதில் விரட்ட முடியும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu