விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்.
கோவையை அடுத்த அன்னூர் பகுதியில், தொழிற்பேட்டை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னூரில் 4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1504 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வந்த அந்த கிராம மக்கள் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்ய கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி உள்ளனர்.
மனுவில், அன்னூர் சுற்று வட்டார, குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 50,000 மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது . இங்கு நடைபெறும் விவசாய பணிகளை நம்பியே விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் எங்களின் 70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல், என்பதற்கான முயற்சி எங்களை சோர்வடையச் செய்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 1000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டது. எனவே விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது. தொழிற்பேட்டை திட்டம் ரத்து, என்ற சட்டப்பூர்வ அறிவிப்பு அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu