காேவை: நீரில் மூழ்கிய கிராமங்களுக்கு இலவச படகு போக்குவரத்து துவக்கம்
மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள படகு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களான காந்தவயல், காந்தையூர், ஆளூர், உளியூர் என நான்கு கிராம மக்கள் பவானியாற்றின் கிளை ஆறான காந்தையாற்றை கடந்தே லிங்காபுரம் என்னும் நகரத்தை ஒட்டியுள்ள ஊரை வந்தடைய வேண்டும். பவானிசாகர் அணையின் பின்புற நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்தாலே வெள்ளம் சூழ்ந்து, வெள்ளக்காடாக காட்சியளிக்கும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அணையின் நீர்தேக்க பகுதியில் பெய்த மழை காரணமாக லிங்காபுரம்-காந்தவயல் இடையே காந்தையாற்றின் மீது கட்டப்பட்டிருந்த இருபதடி உயர் மட்ட பாலம் நீருக்குள் மூழ்கி விட்டது.
இப்பாலத்தின் இணைப்பு சாலையின் மேடான பகுதிகள் மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்த நிலையில் பாலம் இல்லாததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நான்கு கிராம மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் பரிசல்கள் மூலம் காட்டாறான காந்தையாற்றை கடந்து நகர பகுதிக்கு சென்று திரும்பினர். விவசாயம், மருத்துவம், கல்வி, வேலை என அனைத்திற்கும் இப்பகுதி மக்கள் பரிசல் பயணத்தையே நம்பியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது லிங்காபுரம்-காந்தவயல் சாலை முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி விட்டது. இதனால் இப்பகுதி மக்களின் பரிசல் பயண தூரம் மேலும் அதிகரித்துள்ளது. சுமார் முக்கால் மணிநேரம் பரிசலில் பயணித்தால் மட்டுமே அக்கரையை அடைய முடியும் என்ற சூழலில் இப்பயணத்தின் ஆபத்தும் அதிகரித்து விட்டது.
இதனை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் தற்போது வருவாய்த்துறை மூலம் பைபர் படகு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் கிராம மக்களின் பரிசல் பயணம் தவிர்க்கப்பட்டு அரசு சார்பில் பாதுகாப்பான வகையில் படகு பயணம் துவங்கி உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் தாங்கள் சந்தித்து வரும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாலத்தின் உயரத்தை அதிகரித்து புதிதாக கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu