17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம். பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள்
பைல் படம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தபடி படித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பேக்கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி இருவீட்டு பெற்றோரும் பேசி முடிவெடுத்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்வது என்றும், நேற்று திருமணம் நடத்தலாம் எனவும் முடிவு செய்தனர்.
இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 17 வயதிலேயே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக, காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலரான அமராவதிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து காவ ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் யாசர், காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் அமராவதி, குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் கல்பனா ஆகியோர் திருணம் நடைபெறுவதாக வந்த திருமண மண்படத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சிறுமிக்கும், வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது. உடனடியாக காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அதனை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது. அதற்குள் எப்படி திருமணம் செய்யலாம். 18 வயது முடிந்த பிறகே திருமணம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தற்போது நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளதாகவும், சிறுமிக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர் சித்ரா ஆகியோர் இது போன்று செய்யக்கூடாது என இருவீட்டு பெற்றோருக்கும் அறிவுரை வழங்கி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu