கிணத்துக்கடவு அருகே பாறை குழியில் குப்பையை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
பேரூராட்சி குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள்
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, 7வது வார்டு, கிரீன் கார்டன் சிட்டி என்ற இடத்தில் உள்ள பாறை குழியில் கொட்டப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி மாதம் போகி பண்டிகை நாளன்று இந்த குப்பை கிடங்கில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்தனர்.
இதனால், குப்பை கிடங்கில் அளவு கடந்த புகையுடன் தீ எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடியும், அணைக்க முடியவில்லை. தற்போது வரை குப்பை கிடங்கு புகைந்து கொண்டே இருக்கிறது.
இதிலிருந்து வெளிப்படும் கரும் புகையால், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இதனால், இங்கு குப்பை கொட்ட வேண்டாம் என வலியுறுத்தினர்.
அங்கு குப்பை கொட்டி வந்த நிலையில், வடபுதூர் ஊராட்சி மக்களுக்கும் புகையால் பாதிப்பு ஏற்பட துவங்கியது. தொடர்ந்து வடபுதூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்ததால், குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
பாறை குழியில் இருந்து, 50 மீட்டர் தொலைவில் இருக்கும், மற்றொரு பாறை குழியை குப்பை கொட்ட தேர்வு செய்து, அந்த இடத்தை பேரூராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் சிலர் இதை தடுத்தனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி தலைவர் கதிர்வேல் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அப்பகுதியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, மக்கள் கூறுகையில், கிரீன் கார்டன் பகுதியில், ஏற்கனவே இருந்த குப்பை கிடங்கில் எரியும் தீயை தற்போது வரை அணைக்க முடியாமல் போராடி வருகிறோம். இங்கு குப்பை கொட்டுவதை வடபுதூர் ஊராட்சி மக்கள் எதிர்த்ததால், இதன் அருகில் உள்ள மற்றொரு பாறை குழியில் குப்பை கொட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன், இதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை பாம்பு கடித்தது. அப்போது, இந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என கூறியும், சுத்தம் செய்யவில்லை. தற்போது, இங்கு குப்பை கொட்ட வண்டி செல்ல வேண்டும் என்பதால் இந்த இடத்தை சுத்தம் செய்கின்றனர்.
இந்த பாறை குழியில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த நீரை அருகில் உள்ள விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதை குப்பை கிடங்காக மாற்றினால், சுற்றுச்சூழல் பாதிக்கும், விளைநிலமும் பாதிப்படையும்.
இங்குள்ளவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இப்பகுதியில் குழந்தைகள் அதிகம் இருப்பதால் நோய் தொற்று எளிதில் உண்டாகும். எனவே, இங்கு குப்பை கொட்டும் நடவடிக்கையை கைவிட்டு, வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பாறை குழி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இங்கு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குப்பை கொட்ட முறையாக தடுப்புகள் அமைக்கப்படும். இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இங்கு குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu