கோவை கல்லூரிகளில் சைபர் கிளப் அமைக்கும் பணி தீவிரம்
கோப்புப்படம்
நவீன உலகில் சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை பெற்று வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது, உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் மூலமாக ஏமாற்றுவது, பரிசுத் தொகை விழுந்துள்ளதாகக் கூறி லிங்கை அனுப்பி மோசடி செய்வது, முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என லிங்க்கை அனுப்பி மோசடி செய்வது என பல வழிகளில் இணைய வழிக் குற்றங்கள் அரங்கேறுகின்றன.
இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாநகரில் உள்ள கல்லூரிகளில் 'சைபர் கிளப்' அமைக்கும் பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் கூறுகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் திருடுபோன பணத்தை திரும்பப்பெற வாய்ப்புள்ளது.
இதில் தொடர்புடையவர்களை பிடிப்பது கடினம். அதேசமயம் நாம் எச்சரிக்கையாக இருந்தால் இணையவழிக் குற்றங்களில் சிக்காமல் இருக்கலாம். இணையவழிக் குற்றங்கள், இணையதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம் என்று கூறினர்.
கோவை மாநகர காவல் தலைமையிட துணை காவல் ஆணையர் சுஹாசினி கூறுகையில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கல்லூரிகளில் 'சைபர் கிளப்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் உள்ள ஐ.டி பிரிவை தலைமையாகக் கொண்டு இந்த கிளப் தொடங்கப்படுகிறது. இக்குழுவில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 30 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
இணையவழிக் குற்றங்கள் என்றால் என்ன?, அதில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி? என காவல்துறையினரால் விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்படும். அதன் பின்னர் இக்குழுவில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர். மாநகரில் தற்போது வரை 15 கல்லூரிகளில் சைபர் கிளப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மற்ற கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu