கொல்லம் - திருப்பதி இடையே புதிய ரயில்: கோவையில் நிற்கும்!
பைல் படம்
கொல்லத்திலிருந்து திருப்பதி இடையே, வாரமிரு நாட்கள் புதிய ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், கோவையில் நின்று செல்லும் என்பதால், திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைக்கவுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து, ஆந்திராவிலுள்ள திருப்பதிக்கு வாரமிரு முறை ரயிலை புதிதாக இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 15ம் தேதியிலிருந்து, திருப்பதியிலிருந்து இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில், திருப்பதியில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள், மதியம் 2:40 மணிக்குப் புறப்பட்டு, கொல்லத்துக்கு மறுநாள் காலை 6:20க்குச் சென்றடையும்.
கொல்லத்திலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில், காலை 10:45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3:20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.
சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரா, காயாங்குளம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும்.
திருப்பதியிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் (எண்:17421), செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவை சந்திப்புக்கு இரவு 10:12 மணிக்கு வந்து, 10:15 மணிக்குப் புறப்படும்; கொல்லத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் (எண்:17422), புதன் மற்றும் சனிக்கிழமைகளில், கோவை சந்திப்புக்கு மாலை 6:32 மணிக்கு வந்து 6:35 மணிக்குப் புறப்படும்.
கோவையிலிருந்து திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள், இங்கு புதன், சனிக்கிழமை மாலையில் ரயில் ஏறினால், மறுநாள் அதிகாலையில் திருப்பதிக்குச் செல்ல முடியும் என்பதால், இந்த ரயில் சேவை, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர்களுக்குக் கூடுதல் போக்குவரத்து வசதியாக அமையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu