ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: 3 மாத கருவுடன் பெண் யானை உயிரிழந்த சோகம்

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: 3 மாத கருவுடன் பெண் யானை உயிரிழந்த சோகம்
X

உயிரிழந்த யானைகள்.

உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் சுமார் 3 மாத கரு இருப்பது தெரியவந்தது‌.

தமிழக கேரள எல்லையான நவக்கரை அருகே ரயில் பாதை ஒன்று உள்ளது. கேரளாவிலிருந்து ரயில்கள் இந்த பாதை வழியாக தமிழகத்திற்கு சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதையில் வந்து கொண்டிருந்தது.வாளையாறை கடந்து மதுக்கரைக்கு இடையே நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இருப்பினும் ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக அதிவேகத்தில் வந்த ரயில், 3 யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன. இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டன. இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடல்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பாதையில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், யானைகளின் உடல்களுக்கு கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். வனத்துறையினர் முதற்கட்ட விசாரணையில் இரயில் ஓட்டுனர் சுபயர் மற்றும் உதவியாளர் அகிலிடம் வாளையாரிடம் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை செல்லும் இரயில் என்பதால் யானை மீது மோதிய எஞ்சினை பறிமுதல் செய்துவிட்டு, பயணிகள் நலன் கருதி வேறு எஞ்சினுடன் வண்டி அனுப்பி வைக்கப்பட்டது. 1 மணி நேரம் தாமதமாக கிளம்பியது.

இதனிடையே உயிரிழந்த யானைகள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் சுமார் 3 மாத கரு இருப்பது தெரியவந்தது‌. இதையடுத்து யானையின் வயிற்றில் இருந்த கரு அகற்றப்பட்டது. இது அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai based healthcare startups in india