ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
கேரள அதிகாரிகளை கண்டித்து தபெதிக உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம்
கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் நேற்றிரவு ரயில் மோதியதில் 3 காட்டு யானைகள் உயிரிழந்தன. அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட்டது யானை மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இது தொடர்பாக ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகியோரை தமிழக வனத்துறையினர் பாலக்காடு சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர். ரயில் இயக்கப்பட்ட வேகம் குறித்து விசாரணை நடந்திய நிலையில், பாலக்காடு ரயில் நிலையத்தில் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை கேரள ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்களால் சிறைபிடித்தனர்.
ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் ரயில் இஞ்சினில் இருந்து வேகம் கண்டறியும் கருவியை கழட்டியதாகவும், அதனால் தமிழக வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் மிரட்டியதுடன் காவல் நிலையத்தில் சீருடையுடன் அமர வைக்கப்பட்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு வன ஊழியர்கள் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் தமிழக வனத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கோவை வன ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக கேரள மாநில உயர் அதிகாரிகளுடன், தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தமிழக வன ஊழியர்கள் 6 பேரும் 4 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே தமிழக வனத்துறை ஊழியர்கள் சட்ட விரோதமாக கேரள போலீசாரால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மலையாளி சமாஜ் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிறைபிடித்த கேரள ரயில்வே போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே விரைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுனர்கள் சுபயர் மற்றும் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu