கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை

கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை
X

கீர்த்திவாசன்.

2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த கீர்த்திவாசன் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே ந சங்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயியான இவருக்கு 20 வயதில் கீர்த்திவாசன் என்ற மகன் இருந்தார். கீர்த்திவாசன் கடந்த 2018 ம் ஆண்டில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். 2019 ம் ஆண்டில் முதல் முறையாக கீர்த்திவாசன் நீட் தேர்வு எழுதிய நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து ஒராண்டு மீண்டும் படித்து 2020 ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கீர்த்தி வாசன் நீட் தேர்வு எழுதினார். இந்த தேர்விலும் அவர் மீண்டும் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்தார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த கீர்த்திவாசன், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத படித்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் மூன்றாவது முறையாக அத்தேர்வு எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், அத்தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார்.

இதனிடையே தொடர்ந்து 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கீர்த்திவாசன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் மனமுடைந்த கீர்த்திவாசன் நேற்று மதியம் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து தெரியவந்ததை அடுத்து கீர்த்திவாசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கீர்த்திவாசன் உயிரிழந்தார்.

இது குறித்து கீர்த்திவாசனின் தந்தை குப்புசாமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்திவாசனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு